“மங்காத்தா” எனும் பிரமாண்ட வெற்றி படத்திற்கு பின் இயக்குனர் பெரிய எதிர்பார்ப்புக்கு பின் தொடங்கிய இப்படம் வரிசையாக தோல்விகளை சந்தித்து வரும் நாயகனுக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் மிக முக்கிய படம். அதனுடன் இசையமைப்பாளரின் நூறாவது படம் என்பது எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது. பல தேதிகள் மாற்றப்பட்டு இன்று ஒரு வழியாக திரையரங்கு வந்து சேர்ந்துள்ளது. இது Studio Green திரு.ஞானவேல்ராஜா வழங்கும், திரு.கார்த்தி நடிக்கும், திரு.வெங்கட்பிரபுவின் “பிரியாணி”
நமக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத ஒரு விஷயத்தில் நம்மை சிக்க வைத்து, பிறரின் நலனுக்கு நம்மை பகடைக்காயாய் உருட்டி எடுப்பது என்ற சாராம்சத்தை கதைக்கருவாக வைத்துக்கொண்டு அதில் ஒரு நல்ல திரைக்கதையை அமைத்து பொழுதுபோக்கு திரைப்படமாக தந்துள்ளனர் படக்குழுவினர்.
நாயகனாக திரு.கார்த்தி, தனக்கே உரிதான கிண்டல் சிரிப்புடன், நக்கல் வசனங்களுடன் திரைப்படம் முழுவதும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் நடித்திருக்கிறார். ஏனோ இந்த படத்தில் இவரது நடனம் சுத்தமாக எடுபடவில்லை. நாயகியாக செல்வி.ஹன்சிகா, தனக்கான கவர்ச்சி மிகுந்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்துருக்கிறார். திரு.பிரேம்ஜி ஆங்காங்கே சிரிப்பு வரவைக்கும் வசனங்கள் பேசுகிறார், ஆனால் ஒரே மாதிரியான காதாப்பாத்திரமாகவே நடிப்பது பார்ப்பவர்களுக்கு அலுப்பு தட்ட வைக்கிறது. இவர்களை தவிர திரு.நாசர், திரு.ராம்கி, திரு.ஜெய பிரகாஷ், திரு.சம்பத், திரு.பிரேம், என பலர் கதையோட்டத்தின் தேவையை உணர்ந்து சிறப்பாக நடித்திருந்தாலும் நம் மனதில் நிற்பது திருமதி.உமா ரியாசின் நடிப்பு தான் !!
தொழில்நுட்ப கலைஞர்களில் திரு.Stunt சில்வா தனது நூறாவது படத்தில் நல்ல சண்டை காட்சிகளுடன் ஈர்க்கிறார். திரு.யுவன் ஷங்கர் ராஜா தனது நூறாவது படத்தில் பின்னணி இசையில் ஈர்த்தாலும் முத்திரை பதிக்கும் மெல்லிசை பாடல்கள் இல்லாமல் ஏமாற்றியுள்ளார். “எதிர்த்து நில்” பாடலை தவிர மற்ற பாடல்கள் அனைத்தும் இசையிலும், காட்சிப்படுத்தப்பட்ட விதத்திலும் ஏமாற்றமே. திரு.சக்தி சரவணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. இவர்களை தவிர திரு.விதேஷின் கலையமைப்பு, திரு.பிரவீன் மற்றும் ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு, என மற்றவர்களும் தங்களது பணியை நன்றாக செய்துள்ளனர்.
வரிசையாக வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்து விட்டு, தனது முதல் “ஒரு நாயகன்” படம் எடுத்துள்ள திரு.வெங்கட் பிரபு தனது இரண்டாம் பாதி திரைக்கதையில் முத்திரை பதிக்கிறார். எதிர்பார்க்காத திருப்பங்களுடன் பார்ப்பவர்களுக்கு “அப்படி நினைத்தோம் இப்படி ஆகிடுச்சே” என்ற நினைப்பை படம் முடிந்தவுடன் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் முதல் பாதி ஏனோதானோ என்று பார்ப்பவர்களுக்கு அலுப்பு தட்ட வைத்து விடுகிறது. பெரிதாக நகைச்சுவை காட்சிகள் சொபிக்காதது தான் இதன் காரணம் என்பதை நன்றாகவே உணர முடிகிறது. இரண்டாம் பாதியில் காட்டியுள்ள திரைக்கதை ஆற்றல் முதல் பாதியில் வெளிப்பட்டிருந்தால் நல்லதொரு திரைப்படமாக இருந்திருக்கும். WhatsApp, Flash Mob என்ற இன்றைய நடைமுறை விஷயங்களை படத்தில் புகுத்தியது திறமை. ஆங்காங்கே தர்க்கப் பிழைகள் இருப்பது மறுக்க முடியாது என்றாலும் திருப்பங்கள் நிறைந்த இரண்டாம் பாதிக்காக மனமார்ந்த வாழ்த்துக்கள் இயக்குனரே !!
மேல்மட்டம் காரசாரமாக இல்லாமல் அடிமட்டம் சுவைமிகுந்த பிரியாணி காத்திருக்கிறது திரையரங்குகளில் !!
Search Terms : Biriyani tamil movie review , biriyani movie review, Karthi's biriyani movie review, biryani movie review, venkat prabhu biryani movie review
Search Terms : Biriyani tamil movie review , biriyani movie review, Karthi's biriyani movie review, biryani movie review, venkat prabhu biryani movie review
0 comments:
Post a Comment