வருடக் கடைசியில் வந்திருக்கும் சிறந்த படம். எனக்கு தெரிந்து காதலை மிகவும் ரசிப்புத்தன்மையுடன் சொன்ன படம் அலைபாயுதே. அதன் பிறகு அதே அளவுக்கு காதல் உணர்வுகளை சொன்ன படம் இது தான்.
மிக மெதுவாக ஜீவாவின் நட்பில் அலுவல் பணி காரணமாக நுழையும் த்ரிஷா படிப்படியாக ஜீவாவின் நட்பை பெற்று பிறகு அவரின் மனதில் வெகு இயல்பாக காதலை விதைக்கிறார். இந்த காட்சிகள் தான் படத்தின் ஆகப்பெரும் பலம். நாயகியாக ஜூனியர் கமலா காமேஷ் நடித்துள்ளார் என்பது தான் படத்தின் பெரிய பலவீனம். ஜீவா, சந்தானம், வினய் மூவரும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். ஜீவாவின் அப்பா நாசர். ஜீவாவின் அம்மா வேறொருவருடன் ஓடிப் போய் விடுகிறார். இதனால் பெண்கள் என்றாலே வெறுப்புடன் வளர்கிறார் ஜீவா.
ஒரு பிரச்சனையால் நாசருடன் பேசாமல் இருக்கிறார். நண்பர்கள் மூவரும் விளம்பர நிறுவனத்தை இணைந்து நடத்தி வருகிறார்கள். கல்யாணமே செய்ய மாட்டோம் என கல்யாணி பீர் மீது மூவரும் சத்தியம் செய்கிறார்கள். ஓரு விளம்பர படபிடிப்பிற்காக த்ரிஷா இவர்களுடன் இணைகிறார். மெல்ல மெல்ல நட்பாகிறார். ஒரு நாள் ஜீவாவிடம் சொல்லிக் கொள்ளாமல் காணாமல் போகிறார்கள் வினய்யும் சந்தானமும். திரும்பி வந்து ஜீவாவிடம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறுகிறார்கள்.
கோவப்பட்டு அவர்களுடனும் நட்பை முறிக்கும் ஜீவா. த்ரிஷாவுடன் நெருக்கமாகிறார். படிப்படியாக காதல் ஜீவாவுக்குள் முளைக்கிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் பிரிவு ஏற்படுகிறது. எல்லா பிரச்சனைக்கும் காரணம் தன்னுடைய ஈகோ தான் காரணம் என்பதை அறியும் ஜீவா, அதனை கைவிட்டு அப்பாவுடனும், நண்பர்களுடனும், காதலியுடனும் இணைகிறாரா என்பதே படத்தின் கதை.
படத்தின் மெயின்லைனை விளக்கி விட்டு வெறும் சந்தானம், சரக்கை வைத்தே முதல் பாதியை ஓட்டி விடுகிறார்கள். மக்களும் ரிலாக்ஸாக அரங்கில் சிரித்து மகிழ்கின்றனர். நானும் தான். எங்கடா படம் இலக்கில்லாமல் அலைகிறதே என்று நினைக்கும் போது நண்பர்களுக்குள் பிரிவும், இடைவேளையும் வந்து விடுகிறது. அதன் பிறகு த்ரிஷாவுடன் நெருங்கும் போது நமக்கு மனசு ஜில்லென்று பறக்கத் துவங்குகிறது. மன உணர்வுகளை இவ்வளவு இயல்பாக இப்போது வந்த படங்களில் பார்க்கவில்லை. வெல்டன் இயக்குனரே.
ஜீவா கடைசி படங்களில் தோல்வியை கொடுத்திருந்ததால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது. ஆனால் ரிசல்ட் வேற மாதிரி வந்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியையே கொடுத்திருக்கும். நடிப்பிலும் குறைவே வைக்கவில்லை மனுசன். எப்போதும் கடுகடு முகத்துடன் இருக்கும் போது கதாபாத்திரத்தை பிரதிபலிக்கிறார். கடைசியில் காதலை சொல்லும் போதும் அதே சிடுசிடு எக்ஸ்பிரசன் அப்ளாஸை அள்ளுகிறது.
வெல்டன் ஜீவா.
உன்னாலே உன்னாலே, ஜெயம்கொண்டான் படங்களில் பட்டையை கிளப்பிய வினய்யா அது அடப்பாவமே. இந்த படத்தில் அவரது பாத்திரப்படைப்பு நன்றாக இருந்தாலும் வினய்யின் உடல்மொழியும் நடிப்பும் கடுப்பைத்தான் கிளப்புகிறது. பேஸ்புக், டிவிட்டர் மற்றும் மதுரை முத்து, இந்த ஏரியாவிலிருந்து நகைச்சுவைகளை கடன் வாங்கி படம் முழுவதும் தூவி விட்டு இருக்கிறார். சில இடங்களில் நகைக்க வைக்கிறார். பல இடங்களில் முழிக்க வைக்கிறார். சார் சரக்கு தீர்ந்துடுச்சா.
த்ரிஷா கூட நன்றாக நடித்து இருக்கிறார். வயது முதிர்ச்சி முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. கிரீடம் படத்தில் இதே ஹேர்ஸ்டைலில் பார்க்க அழகாக இருப்பார். ஆனால் இந்த படத்தில் ஹேர்ஸ்டைல் மட்டும் அழகாக இருக்கிறது. இரண்டாம் பாதியை கலகலப்பாக அங்கங்கே சந்தானம் வினய் காமெடியை திணித்திருக்கிறார்கள். ஆனால் அதுதான் வேகத்தடையாக இருக்கிறது. இரண்டாம் பாதி அழகை கெடுக்கிறது.
ஆண்ட்ரியா மாடல் அழகியாக வருகிறார். சிரித்துப் பேசி கழுத்தறுக்கும் கேரக்டர். நிறைவாக செய்திருக்கிறார். சரியாக லாக்செய்து ஜீவாவை மன்னிப்பு கேட்கச் சொல்கிறார். ஆனால் அதற்கு ஜீவாவின் ரியாக்சன் தூள். இரண்டு பாடல்கள் தவிர மற்றதெல்லாம் படத்திற்கு வேகத்தடை.
மற்றபடி கேன்சர், அதற்காக நண்பர்கள் நடிப்பது எல்லாம் சினிமாத்தனம். மனிதனின் ஈகோ தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்பது தான் படத்தின் லைன். காதல் உணர்வுள்ள காட்சிகளுக்காகவே படத்தை பார்க்கலாம்.
Search Terms : Endrendrum Punnagai tamil movie review , Endrendrum Punnagai movie review, Jeeva in Endrendrum Punnagai movie review, Endrendrum Punnagai movie review.
0 comments:
Post a Comment