வித்தியாசமான படங்களைத் தொடர்ந்து வழங்கி நம் நம்பிக்கை நாயகனாக விளங்கிவரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் புதுமுக இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் படம் ரம்மி.
மார்க் கம்மியாக எடுத்ததால் வேறு வழியேயின்றி, ஒரு கிராமத்தில் இருக்கும் காலேஜிற்கு இனிகோ பிரபாகர் படிக்கப்போவதுடன் துவங்குகிறது படம். எந்த படத்திலும் இல்லாத அதிசயமாக ஹீரோயினும் அதே காலேஜிற்கே, அட அதே கிளாஸிற்கே படிக்க வருகிறார். அதே கிளாஸில் சேரும் சூரியும் இன்னொருத்தரும் இனிகோவிற்கு நண்பர் ஆகிறார்கள். அங்கு சேர்ந்த கொஞ்சநாளிலேயே, உள்ளூர் பெண்ணை காதலித்தால் வெட்டுவதை கண்ணால் பார்க்கிறார்கள். வெட்டு, குத்து மனிதர்கள் நிறைந்த திகில் கிராமமாக செம பில்டப்புடன் படம் ஆரம்பிக்கிறது.
காலேஜில் இவர்கள் சேர்ந்து இனிகோவிற்கு ஹீரோயின்மேல் காதல் வர, அந்த இன்னொரு ஃப்ரெண்ட்டும் இன்னொரு பெண்ணை லவ் பண்ண ஆரம்பிக்க, சூரி பதறிப்போய்த் திரிய என ஆரம்ப அரைமணி நேரம் அமர்க்களம் தான். எந்த நிமிடம் காதல் ஜோடிகள் பிடிபடுவார்களோ என்று நாம் பதற ஆரம்பிக்கிறோம். ஹீரோயின் ஊர்த்தலைவரின் தம்பி மகள் வேறு என்பதால் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.
காதல் ஜோடிகள் மாட்டுவது போல் சீன் வருகிறது. ஆனால் மாட்டவில்லை, தப்பிக்கிறார்கள். அப்பாடா! அப்புறம் காதல் ஜோடிகள் மாட்டுவது போல் சீன் வருகிறது. ஆனால் மாட்டவில்லை, தப்பிக்கிறார்கள். என்ன இது? அப்புறம் காதல் ஜோடிகள் மாட்டுவது போல் சீன் வருகிறது. ஆனால் மாட்டவில்லை, தப்பிக்கிறார்கள். என்னங்கடா இது? இப்படியே ஏதோ நடக்கப்போகிறது என்று நாம் எதிர்பார்த்து உட்கார, திரும்பத் திரும்ப இந்த பூச்சாண்டியிலேயே அடுத்து ஒரு மணி நேரம் ஓடுகிறது.
இப்போ ஹீரோ ஊருக்கு போய்ட்டு வர்றாரு. வந்தா ஃப்ரெண்டைக் காணோம். ஒரு லெட்டர். மச்சான், வேற வழியில்லை. பொண்ணைக்கூட்டிட்டு ஓடிப்போறோம். நீயும் தப்பிச்சிடுன்னு லெட்டர். அப்போ வைக்கிறாங்க பாருங்க ஒரு ட்விஸ்ட்டு. அந்த இன்னொரு ப்ரெண்டு லவ் பண்ணது, இழுத்துட்டுப் போனது ஊர் தலைவரின் பெண்ணை-ன்னு!
என்னாங்கடா இது..ஊருக்குள்ள தங்கி இருக்கானுக..தலிவரு பெரிய அப்பாடக்கர்ன்னு தெரியுது..அவரு பொண்ணு தெரியாதா? அது பரவாயில்லை, லவ் பண்றவன்கிட்ட தன் அப்பன் யார்னு கூட சொல்லாதா? ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிறதுன்னு சொல்வாங்களே அதெல்லாம் கிடையாதா? சரி, எப்படியோ தப்பிச்ச ஹீரோ இனிகோ, ஃப்ரெண்ட்டைத் தேடுதாரு. அதுக்குள்ள தலைவர் கோஷ்டி ஃப்ரெண்ட்டை போட்டுத்தள்ளிட்டு, பொண்ணை ஊருக்கு கொண்டுவந்திடுது.
அந்த தலைவரு, குடும்ப மானத்தை பஸ்ல ஏத்துன பொண்ணை கொல்ல போறாரு. அந்த பொண்ணு தலைவரை கொன்னுட்டு, ஹீரோ-ஹீரோயினை சேர்த்துவச்சுட்டு, கையில அருவாளோட நடக்க ஆரம்பிக்குது. ’ஏலேய்..அது நம்மளைப் பார்த்துத்தான் வருதுலே’ன்னு நாம அலறும்போது, படம் முடிஞ்சிடுது.
படத்தோட மிகப்பெரிய பலமே கிளைமாக்ஸ் தான். ஆனா அவங்க அப்பன் - மகள் அப்படிங்கிறதையே சஸ்பென்ஸா வைக்கிறதா முடிவுபண்ணது தான், ஆப்பு ஆகிடுச்சு. படத்தை த்ரில்லர் மாதிரி கொண்டு போனது ஏன்னும் புரியலை. ஒவ்வொரு சீன்லயும் வில்லேஜ் பீட்சாங்கிற அளவுக்கு டெரரா காட்டுறாங்க. ஆனா லாஜிக்கே இல்லாமல் கதை அந்தரத்தில் ஆடும்போது, டெரர் எஃபக்ட் எடுபடாம போயிடுது.
அதெல்லாம் சரி..விஜய் சேதுபதியை எங்கய்யான்னு கேட்கிறீங்களா? மேலே ‘இன்னொரு ஃப்ரெண்ட்டு’ன்னு ஒரு துணை நடிகரைப் பத்தி படிச்சீங்க இல்லியா? அவர் தான் விஜய் சேதுபதி...ஆ.......-வா? ம்..அதே ஃபீலிங் தான் இங்கயும். ஓரமா வர்றாரு, ஓரமா லவ் பண்றாரு, பொசுக்குன்னு செத்துப்போறாரு. ஆமா பாஸ், இது இனிகோ பிரபாகர் படம் பாஸ்!
சுந்தர பாண்டியன் மாதிரி இல்லாம, இதுல முழு ஹீரோ. நல்ல சான்ஸ். நல்லாவே யூஸ் பண்ணி இருக்காரு. ஆனா விஜய் சேதுபதியை எதிர்பார்த்து போனதால, ரொம்ப இவரை ரசிக்க முடியலை. காதல், காமெடி, ஆக்சன்னு எல்லா ஏரியாலயும் புகுந்து அடிக்கிறாரு. செகண்ட் ஹீரோவா ஒரு ரவுண்டு வர சான்ஸ் இருக்கு!
விஜய் சேதுபதி: என்ன டேஷ்க்கு இதுல நடிக்க ஒத்துக்கிட்டாருன்னு கேட்கத் தோணுது. நடிக்க பெரிய ஸ்கோப் இல்லை. ஹீரோக்கு அல்லக்கை, ஹீரோயின் வாய்யா ஓடிப்போவோம்ன்னா, ஓகேன்னு ஓடற மொன்னை கேரக்டர். நட்புக்காக இதைப் பண்ணினாருன்னா, பெரிய விஷயம் தான். ஆனாலும் ஆடியன்ஸை ஏமாத்தக்கூடாதுல்ல அப்பு?
சூரிக்கு ஓரளவு நல்ல கேரக்டர். ரொம்ப மொக்கை போடாம, காலேஜ் சீன்கள்ல (பத்து நிமிசம்) நல்லாவே காமெடி பண்றார். அப்புறம் ஒரு நல்ல குணசித்ர நடிகராவும் ஆகிடறார்.இமானின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் அட்டகாசம். ஒரு த்ரில்லர் படத்துக்கு தர வேண்டிய இசையை பெர்ஃபெக்ட்டா அண்ணன் கொடுத்திருக்காரு. ஆனா படம் தான் த்ரில்லரா இல்லாமப் பூடுச்சு!
ரம்மி.... ஆக்கிட்டாங்கையா "டம்மி"
Tags : திரைவிமர்சனம் ரம்மி , ரம்மி விமர்சனம்,
Rummy Movie Review, vijay sethupathi Rummy, partota Soori Rummy, Rummy Review